என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நயினார் நாகேந்திரன்"

    • உதயசூரியன் அவர்களின் இந்தப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
    • மடியில் கனமில்லை என்றால் வழியில் பயம் எதற்கு?

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள கிராமத்தில் திமுக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. அப்போது, சாலை வசதி செய்து தராமல் உறுப்பினர் சேர்க்கைக்கு மட்டும் ஏன் வருகிறீர்கள்? என இளைஞர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

    இந்நிலையில், கேள்வி கேட்ட இளைஞர்களுக்கு திமுக எம்எல்ஏ உதயசூரியன் மிரட்டல் விடுத்ததாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து, நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கைக்காக சென்ற சங்கராபுரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் அவர்களிடம், "சாலை வசதி செய்து தராமல் உறுப்பினர் சேர்க்கைக்கு மட்டும் ஏன் வருகிறீர்கள்?" என அப்பகுதி இளைஞர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

    வாக்களித்த மக்களின் நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்லி பழக்கமில்லாத திமுகவைச் சேர்ந்த உடன்பிறப்புகள் அந்த இளைஞர்களை அடக்க முற்படுகின்றனர்.

    திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. உதயசூரியன் அவர்களோ ஒருபடி மேலே சென்று அந்த இளைஞர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டும் தொனியில் பேசுகிறார்.

    உதயசூரியன் அவர்களின் இந்தப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. இதுதான் கட்டப்பஞ்சாயத்து மாடல் அரசின் உண்மை முகம்.

    திமுகவின் வெற்று விளம்பரங்களை நம்பி தமிழக மக்கள் ஏமாந்து விடுவார்கள் என மனக்கோட்டை கட்டி வந்த திமுக தலைவர்களை, போகும் இடங்களிலெல்லாம் மக்கள் தங்கள் கேள்விகளால் துளைத்தெடுக்கிறார்கள்.

    ஆட்சி அமைந்ததும் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தராத திமுக கட்சிக்கு, ஆள்சேர்க்கை ஒரு கேடா? என மக்கள் கொந்தளிக்கிறார்கள்.

    அதை எதிர்பாராத திமுக தலைவர்கள் என்ன செய்வதென தெரியாமல் தங்கள் நிதானத்தை இழக்கிறார்கள். மடியில் கனமில்லை என்றால் வழியில் பயம் எதற்கு?

    கடந்த நான்கு வருடங்களாக கால் வைக்கும் இடங்களிலெல்லாம், கையில் கிடைக்கும் துறைகளிலெல்லாம் ஊழல் செய்துவிட்டு, தேர்தல் நெருங்கும் காலத்தில் ஒன்றும் தெரியாதது போல் மக்களை சென்று நலம் விசாரித்தால் இதுதான் நடக்கும். கோடிக்கோடியாக மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த திமுக அரசின் அழிவிற்கான ஆரம்பம் இது!

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் 332 ஆசிரியர்களுக்கு ஜூன் மாத சம்பளத்தை இன்னும் வழங்கப்படவில்லை.
    • விழித்துக்கொள்ளுமா விடியல் அரசு?

    சென்னை :

    பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    ஜூலை மாதமே முடியவிருக்கும் நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் 332 ஆசிரியர்களுக்கு ஜூன் மாத சம்பளத்தை வழங்கக்கூட அரசிடம் பணம் இல்லையா? அல்லது மனம் இல்லையா?

    தினமொருமுறை ஞாபகப்படுத்தினால் தான் ஆசிரியர்களின் நலனை திராவிட மாடல் அரசு கண்டுகொள்ளும் என்றால் அதை செய்யவும் எங்கள் தமிழக பா.ஜ.க. தயாராக உள்ளது! விழித்துக்கொள்ளுமா விடியல் அரசு? என்று வினவியுள்ளார். 



    • பா.ஜ.க. சார்பில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
    • கேசவ விநாயகம், கருப்பு முருகானந்தம், முன்னாள் மாவட்ட தலைவர் அய்யப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற உள்ள ஆடி திருவாதிரை விழாவில் வரும் 27-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார். இதனை முன்னிட்டு பா.ஜ.க. சார்பில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இதில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், கேசவ விநாயகம், கருப்பு முருகானந்தம், முன்னாள் மாவட்ட தலைவர் அய்யப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் அரியலூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் பரமேஸ்வரி வரவேற்று பேசுகையில், நயினார் நாகேந்திரனை வருங்கால 'துணை முதலமைச்சரே' என குறிப்பிட்டு பேசினார்.

    உடனடியாக பதட்டம் அடைந்த நயினார் நாகேந்திரன் அப்படியெல்லாம் சொல்லக்கூடாது என மாவட்ட தலைவர் பரமேஸ்வரிக்கு அறிவுறுத்தினார்.

    அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி அமைந்தது முதலே, ஆட்சியில் பங்கு, கூட்டணி ஆட்சி எனும் சர்ச்சை தொடர்ந்து வரும் நிலையில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை, துணை முதலமைச்சர் என குறிப்பிட்டு மாவட்ட தலைவர் அழைத்தது மேலும் பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தமிழகத்தில் பெருகி வரும் குற்றங்களைத் தான் திமுக அரசால் கட்டுப்படுத்த முடியாது என்றால், பெருகிவரும் குப்பைகளைக் கூட தடுக்க இயலாதா?
    • திராவிட மாடல் அரசின் திறனற்ற நிர்வாகத்தால் நோய்களின் தொட்டிலாக தமிழகம் மாறிவருவது மிகக் கொடுமையானது.

    சென்னை:

    பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மத்திய அரசால் வெளியிடப்பட்ட தூய்மை நகரங்கள் பட்டியலில் தேசிய அளவில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட 40 நகரங்களின் தரவரிசையில் தமிழகத்தின் தலைநகர் சென்னை 38-வது இடத்தையும், மதுரை 40-வது இடத்தையும் பெற்றிருப்பது மிகுந்த கவலையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.

    தமிழகத்தின் ஒரு நகரம் கூட தூய்மை நகரங்களின் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் வராத நிலையில், வருடாவருடம் தூய்மைப்பணிகளுக்காக பல்லாயிரக்கணக்கான கோடிகளை செலவிடுவதாக திராவிட மாடல் அரசு காட்டிய கணக்குகள் எல்லாம் என்ன ஆனது? தமிழகத்தில் பெருகி வரும் குற்றங்களைத் தான் திமுக அரசால் கட்டுப்படுத்த முடியாது என்றால், பெருகிவரும் குப்பைகளைக் கூட தடுக்க இயலாதா?

    தரம் குன்றி வரும் அரசு மருத்துவமனைகள், குப்பைகளின் கூடாரமாகி வரும் மாநகரங்கள், பராமரிப்பு என்ற பெயரில் நடக்கும் ஊழல் முறைகேடுகள், அவற்றைக் கண்டுகொள்ளாத ஆட்சியாளர்கள் என திராவிட மாடல் அரசின் திறனற்ற நிர்வாகத்தால் நோய்களின் தொட்டிலாக தமிழகம் மாறிவருவது மிகக் கொடுமையானது.

    குப்பைக்காடாக தமிழகத்தை மாற்றிவிட்டு, நாடு போற்றும் நல்லாட்சி என்று இனியொரு முறை கூறுவதற்கு திமுகவின் தலைவர்கள் கூனிக்குறுக வேண்டும்! என்று கூறியுள்ளார். 



    • பசப்பு வார்த்தைகளால் இதைக் கடந்துவிட முடியாது!
    • காமராஜரை இழிவுபடுத்துவதே திமுகவின் நோக்கம் என்பது ஊரறிந்த விஷயம்!

    பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    எத்தனை பதிவுகளை இட்டு, பூசி மெழுக முயன்றாலும், உண்மை வரலாற்றை எவராலும் அழிக்க முடியாது, மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே! அப்படியானதை நான்கு கருப்பு-வெள்ளை புகைப்படங்களால் நீங்கள் அழிக்க நினைப்பது வேடிக்கையாக உள்ளது!

    கர்ம வீரர் காமராஜரை அவமானப்படுத்த திமுக பரப்பிய அவதூறுகளையும், பொய் பிரச்சாரங்களையும், கேலிச் சித்திரங்களையும், மேடைப் பேச்சுக்களையும் காங்கிரஸ் கட்சி மறந்திருக்கலாம், ஆனால் தமிழக மக்களின் நினைவில் இவையெல்லாம் நீங்கா ரணங்களாக இன்றளவும் இருக்கின்றன!

    உங்கள் துணைப் பொதுச் செயலாளர் திரு. திருச்சி சிவா அவர்கள், பெருந்தலைவர் காமராஜரை இழிவுபடுத்திப் பேசவில்லை என நீங்கள் மழுப்பலாம். உங்கள் அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ்.பாரதி

    அவர்கள், "காமராஜருக்குக் கல்லறை கட்டியதே நாங்கள் தான்" என்று கூறவில்லை என உண்மையைத் திரிக்கலாம்.

    ஆனால், இதோ முரசொலி இதழிலேயே மிகவும் கொச்சையாகவும், கீழ்த்தரமாகவும் நீங்கள் காமராஜரை இழிவுபடுத்திய காட்சிகள்.

    இதை உங்களால் மறுக்க முடியுமா, அல்லது இன்று நியாயப்படுத்திப் பேச முடியுமா?

    ஆகவே, பசப்பு வார்த்தைகளால் இதைக் கடந்துவிட முடியாது! காமராஜரை இழிவுபடுத்துவதே திமுகவின் நோக்கம் என்பது ஊரறிந்த விஷயம்!

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கர்மவீரர் காமராஜரைக் கொச்சைப்படுத்திப் பேசுவது திமுக-வினரின் வழித் தோன்றல்களுக்குப் புதிதில்லை.
    • உள்நோக்கம் கொண்டு திருச்சி சிவா பேசியிருப்பது உண்மையிலேயே பேரதிர்ச்சியாக உள்ளது.

    பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கர்மவீரர் காமராஜரைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் திமுக-வினருக்கு

    பாஜக சார்பாகக் கண்டனங்கள்.

    மறைந்த தலைவர்களைக் கொச்சைப்படுத்திப் பேசுவது, அவர்களது மேன்மையை இழிவுபடுத்திப் பேசுவது திமுகவிற்குப் புதிதில்லை. குறிப்பாக, கர்மவீரர் காமராஜரைக் கொச்சைப்படுத்திப் பேசுவது திமுக-வினரின் வழித் தோன்றல்களுக்குப் புதிதில்லை.

    தற்போது, திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. திருச்சி சிவா அவர்கள், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அவர்களைப் புகழ்கிறேன் என கர்மவீரர் காமராஜர் அவர்களைக் குறைத்துப் பேசியிருப்பது, அதுவும் வரலாற்றுத் திரிபைச் செய்திருப்பது வருந்தத்தக்கது என்பதை விட வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.

    தன் மறைவுக்கு முன்பு திரு. கருணாநிதியின் கரங்களைப் பிடித்துக் கொண்டு ஜனநாயகத்தைக் காக்க வேண்டுமென்று காமராஜர் கேட்டதாகவும், மின் வெட்டினைக் கண்டித்தும் திமுக அரசின் அவலத்தை எதிர்த்தும் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்திய காமராஜர் அவர்கள் ஏசி இல்லாமல் இருக்கமாட்டார் என்றும் அவருடைய தங்கும் விடுதி உட்பட அனைத்து இடங்களிலும் குளிர்சாதன வசதி செய்தவர் திரு. கருணாநிதி என்றும் திருச்சி சிவா பேசியுள்ளார்.

    ஏழை எளிய மக்களின் வாழ்வு மேம்பட உழைத்த ஒப்பற்ற மனிதரான காமராஜர் சுகவாழ்வு வாழ்ந்தார் என்பது போல உள்நோக்கம் கொண்டு திருச்சி சிவா பேசியிருப்பது உண்மையிலேயே பேரதிர்ச்சியாக உள்ளது.

    அதோடு எமர்ஜென்சியின் போது காமராஜரைக் கைது செய்ய கங்கணம் கட்டிக் கொண்டிருந்த திருமதி. இந்திரா காந்தியிடமிருந்து திமுக அரசு தான் அவரைக் காத்தது என்றும் பேசியுள்ளார்.

    சுதந்திரப் போராட்டத்தில் வெள்ளையர்களை எதிர்த்து சிறை சென்ற காமராஜரை இந்திரா காந்தியிடமிருந்து காத்தோமென திமுக சொல்வதெல்லாம் நகைப்புக்குரியது. திரு. காமராஜர் அவர்களை அன்று திருமதி. இந்திரா காந்தி அவர்கள் கைது செய்திருந்தால் தமிழகமே வெகுண்டெழுந்திருக்கும், இன்று அதை வைத்து அவரை இழிவு செய்யும் திமுகவிற்கு எதிராகவும் நிச்சயமாக வெகுண்டெழும்.

    மேலும், திருமதி. இந்திரா காந்தியின் எதேச்சதிகாரத்தை எதிர்த்து தான் காங்கிரஸ் அன்று உடைந்தது. அப்போது திரு. காமராஜர் அவர்களை எதிர்த்துக் கொண்டு இந்திரா காந்தியோடு கூட்டணி வைத்தது யார்? இதே திரு. கருணாநிதி தலைமையிலான திமுகதானே?

    காமராஜரின் புகழும், அரசியலும் அழிய வேண்டுமென்று பணி செய்தது திமுகதான். அவர்களுடைய ஆழ் மனதின் வன்மம் எப்போதும் காமராஜரைப் பதம் பார்த்துக் கொண்டேதான் உள்ளது. சட்டமன்றத்திலேயே காமராஜரின் அருஞ்செயலை திரு. கருணாநிதி மீது ஏற்றிக் கூறினார் அமைச்சர் திரு. துரைமுருகன் அவர்கள். காமராஜருக்கே கல்லறை கட்டினோம் எனக் கொச்சையாகப் பேசினார் திரு. RS பாரதி. அதே வரிசையில் அவதூறை அள்ளித் தெளித்துள்ளார் திரு. திருச்சி சிவா.

    உண்மை என்னவென்றால், தன்னுடைய ஒப்பற்ற தலைவர்களில் ஒருவரான காமராஜர் மீது காங்கிரஸ் கட்சியே தீரா காழ்ப்பில்தான் உள்ளது. அதனால்தான் திமுக காமராஜரைக் கொச்சைப்படுத்தும் போதெல்லாம், பெயருக்குக் கூட ஒரு கண்டனம் தெரிவிக்காமல், உள்ளூர ரசித்தப்படியே கூட்டணியில் தொடருகிறது.

    கர்மவீரர் காமராஜரைக் கொச்சைப்படுத்திப் பேசியதற்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் திரு. திருச்சி சிவா அவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இதை ஒரு போதும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இதைத் தமிழக பாஜகவும் எளிமையாகக் கடந்து செல்லாது என்பதையும் தெளிவாகக் கூறிக் கொள்கிறேன்.

    • தற்காலிக பேராசிரியர்களுக்கு வழங்கப்படும் சொற்ப ஊதியத்தை வழங்கவும் அரசுக் கஜானாவில் பணமில்லையா.
    • திறனற்ற திமுக ஆட்சி இருக்கும் வரை மாணவர்களின் எதிர்காலம் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்காலமே பாழாகிவிடும்.

    தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகம் முழுவதுமுள்ள உயர்கல்வி நிலையங்களில் போதிய பேராசிரியர்களை நியமிக்காது இழுத்தடிக்கும் அவலத்திற்கு மத்தியில், தற்போது அண்ணா பல்கலைக்கழக தற்காலிக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் 2000 பேரின் ஒப்பந்தத்தையும் நீட்டிக்காது திமுக அரசு அலட்சியம் காட்டிவருவது கண்டனத்திற்குரியது.

    நிரந்தர பேராசிரியர்களை நியமித்து மாணவர்கள் நலனைப் பாதுகாக்கத்தான் அக்கறை இல்லை என்றால், ஒப்பந்தத்தை நீட்டித்து, தற்போது இருக்கின்ற பேராசிரியர்களைத் தக்க வைத்துக் கொள்ளக் கூட மனமில்லையா? கிட்டத்தட்ட 332 தற்காலிக பேராசிரியர்களுக்கு ஜூன் மாத சம்பளத்தையும் வழங்காது காலந்தாழ்த்துவது ஏன்? தற்காலிக பேராசிரியர்களுக்கு வழங்கப்படும் சொற்ப ஊதியத்தை வழங்கவும் அரசுக் கஜானாவில் பணமில்லையா?

    ஆக மொத்தத்தில், பள்ளிக்கூடங்களில் இருந்து உயர்கல்வி நிலையங்கள் வரை கல்வித்துறையைக் கண்டுகொள்ளாது அலட்சியம் காட்டும் இந்த நிர்வாகத் திறனற்ற திமுக ஆட்சி இருக்கும் வரை மாணவர்களின் எதிர்காலம் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்காலமே பாழாகிவிடும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை என கூறினார்.

    • அதிமுக-வுடன் கூட்டணி வைத்த நாளில் இருந்து பதட்டத்திலும், விரக்தியில் இருக்கிறார்கள்.
    • தோற்கப்போவது உறுதி என்பது அவர்கள் எல்லோருக்கும் தெரிகிறது.

    தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது படி படி என்கிறது திராவிட மாடல். படிக்காதே என்கிறது காவி கும்பல் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சொல்கிறாரே? என்ற கேள்விக்கு "முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.

    ஓரணியில் திரள்வோம், ஓரணியில் சேருவோம் என்கிறார். இப்போது ஓரணியில் சேர என்ன அவசரம் வந்துள்ளது. படிப்பதற்கு பிரதமர் மோடி ஏராளமான திட்டங்களை கொடுத்திருக்கிறார். தோல்வி பயத்தில் இருக்கிறார்கள். அமித் ஷா சென்னை வந்து, அதிமுக-வுடன் கூட்டணி வைத்த நாளில் இருந்து பதட்டத்திலும், விரக்தியில் இருக்கிறார்கள்.

    தோற்கப்போவது உறுதி என்பது அவர்கள் எல்லோருக்கும் தெரிகிறது. தோல்வி பயத்தில் அடுக்கு மொழியில் பேசிகிட்டு.. இதே காவி கும்பல் உடன்தான் கலைஞர் கூட்டணி வைத்தார். இந்த காவி கும்பல் உடன்தான் அன்னைக்கு இருந்தார்கள்" என்றார்.

    மேலும், "பாஜக உடன் கூட்டணி வைக்கும்போது சங்கிகளாகத்தான் இருந்தார்கள். பாஜக-விடம் அதிமுக-வை அடகு வைத்ததாக சொல்கிறார்கள். அப்படி கிடையாது. காங்கிரஸ் கட்சியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் திமுக-விடம் அடகு வைத்துள்ளார்களா?. இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

    அதிமுக-வை பாஜக கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கி கொண்டிருக்கிறது எனச் சொல்கிறார்கள். அதைப் பற்றி அக்கறை அவர்களுக்கு எதற்கு. பாஜக, திமுக உடன் கூட்டணி வைத்திருந்தது. அப்போது அவர்களை விழுங்கினோமா?. தோல்வி பயத்தில் ஏதாவது சொல்ல வேண்டும் என சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டு நல்ல ஆட்சி வர வேண்டும். திமுக 200 தொகுதிகளில் ஜெயிப்போம் என்கிறார்கள். நாங்கள் 234 தொகுதிகளிலும் ஜெயிப்வோம்" என்றார்.

    • 2024 தேர்தலில் நெல்லை மக்களவை தொகுதியில் ராபர்ட் புருஸ் பெற்ற வெற்றி செல்லாது என வழக்கு.
    • சொத்து விவரங்களை மறைத்துள்ளதாக நயினார் நாகேந்திரன் வழக்கு தொடர்ந்தார்.

    பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

    தேர்தல் வழக்கில் குறுக்கு விசாரணைக்காக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார்.

    2024 தேர்தலில் நெல்லை மக்களவை தொகுதியில் ராபர்ட் புருஸ் பெற்ற வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி நயினார் வழக்கு தொடர்ந்தார்.

    ராபர்ட் புருஸ் தன் மீதான வழக்கு விவரங்கள் மற்றும் சொத்து விவரங்களை மறைத்துள்ளதாக நயினார் நாகேந்திரன் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கின் குறுக்கு விசாரணைக்காக நயினார் நாகேந்திரன் ஆஜர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பூத் கமிட்டி வேலைகள் குறித்து கட்சி நிர்வாகிகளிடம் நயினார் நாகேந்திரன் கேட்டறிந்தார்.
    • ஓட்டுப் போட மாட்டோம்' என மக்கள் சொல்கிறார்கள் என்று பாஜக தொண்டர் கூற சிரிப்பலை எழுந்தது.

    விருதுநகர் நந்திமரத் தெருவில் பாஜக பூத் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று மாலை ஆய்வு மேற்கொண்டார். அப்போது பூத் கமிட்டி வேலைகள் குறித்து கட்சி நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.

    அப்போது நயினார் நாகேந்திரனிடம் பேசிய பாஜக தொண்டர் ஒருவர், "நான் தேர்தலில் நின்றேன். உங்களுக்கு சோறு கூட போடுறோம். ஆனா ஓட்டுப் போட மாட்டோம்' என மக்கள் சொல்கிறார்கள்.." என்று கூற அப்பகுதியில் சிரிப்பலை எழுந்தது.

    வெளிப்படையாக பேசிய பாஜக தொண்டரால் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அதிர்ச்சி அடைந்தார்.

    • வள்ளியூரில் ஒரு மூதாட்டி 17 பவுன் நகைக்காக கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
    • நிச்சயமாக 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.

    மதுரை:

    விருதுநகர் செல்வதற்காக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    டீசல், பெட்ரோல் போடுவதிலேயே தமிழக அரசு கோடிக்கணக்கான ரூபாய் பாக்கி வைத்துள்ளார்கள். அரசாங்கம் போக்குவரத்து மானியம் கொடுத்து அதை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இது முதலமைச்சர் செய்ய வேண்டிய வேலை.

    இன்றைக்கு முதலமைச்சரை பொருத்தமட்டில் எப்போது அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைந்ததோ அப்போது இருந்தே அவருக்கு ஜுரம் வந்துவிட்டது. தோல்வி பயம் வந்துவிட்டது. கூட்டணி கட்சித் தலைவர்களும் அதே மாதிரி தான் பேசுவார்கள்.

    அம்பாசமுத்திரத்தில் ஒரு 17 வயது சிறுமியை போதை பழக்கமுடையவர் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். வள்ளியூரில் ஒரு மூதாட்டி 17 பவுன் நகைக்காக கொலை செய்யப்பட்டிருக்கிறார். தினசரி இதுபோன்ற சட்ட ஒழுங்கு பிரச்சனை உள்ளது. போதைப்பொருள்கள் நடமாட்டம் உள்ளது. இதை மறைப்பதற்காக முதல்வர் ஓரணியில் தமிழ்நாடு என்கிற பெயரில் ஊர் ஊராக செல்கிறார். இதனால் எந்த நன்மையும் இல்லை. இன்று தி.மு.க. அரசு வெகுஜன மக்களின் விரோத ஆட்சியாக உள்ளது. நிச்சயமாக 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.

    முதலமைச்சருக்கு இப்போது என்ன பேசுவது என்று தெரியவில்லை. முன்னாள் முதல்வர் பழனிசாமி அவர்கள் பேச வேண்டிய கருத்தைதான் பேசியிருக்கிறார். கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம், டம்மி வாய்ஸாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. வைகோ எப்போதும் அதிகம் கோபப்படக் கூடியவர். கூட்டத்தில் இருக்கும்போது சத்தம் போடுவது எல்லா இடங்களிலும் செய்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போன் எடுத்தா எல்லோரும் என்ன சொல்லணும்னா... வணக்கம் சார் என்று சொன்னா நல்லா இருக்கும்.
    • குறையாக சொல்லவில்லை. வசதியான வீட்டு பிள்ளைகள் அப்படிதான் வளர்ந்து இருப்பார்கள். தப்பா நினைக்காதீங்க.

    பா.ஜ.க. கட்சி கூட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது:

    கட்சி நிர்வாகிக்கு போன் செய்தேன்... நயினார் நாகேந்திரன் பேசுகிறேன் என்றேன். ஆ... சொல்லுங்க... என்கிறார்.

    வணக்கம் கூட சொல்லுவதில்லை நம் கட்சியில் பாதி பேர்... நான் எதார்த்தமாக சொல்கிறேன்.

    போன் எடுத்தா எல்லோரும் என்ன சொல்லணும்னா... வணக்கம் சார் என்று சொன்னா நல்லா இருக்கும்.

    குறையாக சொல்லவில்லை. வசதியான வீட்டு பிள்ளைகள் அப்படிதான் வளர்ந்து இருப்பார்கள். தப்பா நினைக்காதீங்க.

    எப்படி இருக்க வேண்டும் என்றால் போன் எடுத்தால் வணக்கம் சார்... எப்படி இருக்கீங்க என்று கேட்டால் நன்றாக இருக்கும்.

    வடசேரியில் சாலியர் தெரு, போன் செய்து கிளைக்கழக செயலாளர் தானா என்று கேட்டேன்.

    கிளைக்கழக செயலாளர் நான் இல்லையே. கண்ணன் என் பேரை சொல்லி இருப்பான் என்று நினைக்கிறேன். நான் போட்டோ கடையில் வேலை பார்க்கிறேன் என்று சொன்னார்.

    இல்லைப்பா... நீ தான் கிளைக்கழக செயலாளர். உன் பேரு, போன் எல்லாம் இருக்கிறது. நான் நயினார் நாகேந்திரன். என்னை தெரியுதா உனக்கு. முன்பு அமைச்சராக இருந்தேன். பஸ்செல்லாம் ஓட்டும்போது. அம்மா பீரியட்ல அமைச்சராக இருந்தேன்.

    அப்படியா.. நீங்க யாருன்னு தெரியலை. கண்ணன் கிட்ட கேட்டு சொல்றேன் என்று சொன்னார்.

    இன்னொரு போன் கடலூருக்கு செய்தேன். நான் நயினார் நாகேந்திரன் பேசுகிறேன் என்றேன்.

    அவங்க காதுக்கு உங்க வீட்டு நயினா பேசுறமாதிரி கேட்டு இருக்கு... ஏய்... இன்னா ஒழுங்கா இருந்துக்கோ... என்றார்கள்.

    உடனே போனை வேறொருவரிடம் கொடுத்து விட்டேன்.

    சில இடங்களில் சில விஷயங்கள் இப்படி நடக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×